சாத்தான்குளத்தில் பரபரப்பு:யூனியன் ஆணையாளரை இடமாற்றம் செய்ய வேண்டும்

சாத்தான்குளத்தில் யூனியன் ஆணையாளரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.;

Update: 2023-06-23 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் பஞ்சாயத்து யூனியன் குழு கூட்டத்தில் ஆணையாளரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

யூனியன் குழு கூட்டம்

சாத்தான்குளம் பஞ்சாயத்து யூனியன் குழு சாதாரணக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு யூனியன்குழு தலைவர் ஜெயபதி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அப்பாத்துரை, யூனியன் ஆணையாளர் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் யூனியன் கவுன்சிலர்கள் ப்ரெனிலா கார்மல், சுமதி, குருசாமி, லதா, பிச்சிவிளை சுதாகர், மீனா, செல்வம், சசிகலா, ஜோதி, ஜேசு அஜிட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கவுன்சிலர்கள் வெளிநடப்பு

கூட்டம் தொடங்கியதும் அனைத்து கவுன்சிலர்களும் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று யூனியன் ஆணையாளருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் கவுன்சிலர்கள் கூறுகையில், யூனியனில் போதிய நிதி இருந்தும் திட்டங்களை செயல்படுத்தாமல் ஆணையாளர் காலம் தாழ்த்துகிறார். யூனியன் குழு கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் இதுவரை ஒப்புதல் பெறப்படாமல் உள்ளது. எனவே, அவரை பணிமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் திடீரென வெளிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆணையாளரை இடமாற்றம்...

பின்னர், யூனியன் தலைவர் அறையில் அனைத்து கவுன்சிலர்களும் கூடினர். அப்போது, யூனியனில் எந்த திட்டப்பணிகளையும் நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் கூறும் புகார்களுக்கு பதில் கூற முடியவில்லை. இதனால் ஆணையாளரை பணிமாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். இதை தொடர்ந்து யூனியன் ஆணையாளரை பணிமாற்றம் செய்ய வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மற்ற 17 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்