பழனி முருகன் கோவிலுக்கு மூன்று சக்கர மின்சார வாகனம்
பழனி முருகன் கோவிலுக்கு மூன்று சக்கர மின்சார வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக வழங்கினார்.;
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம், பொங்கல், முறுக்கு, லட்டு உள்ளிட்டவை பிரசாதமாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பஞ்சாமிர்தத்தை அடிவாரத்தில் இருந்து ஏற்றிச் செல்வதற்கு 'மெட்டீரியல் ரோப்கார்' உள்ளது. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 1½ டன் வரைக்கும் பஞ்சாமிர்தம் மலைக்கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதைத்தவிர அன்னதானத்துக்கான அரிசி, மளிகை பொருட்கள் ஆகியவை மின் இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த பொருட்கள் தள்ளுவண்டி மூலம் அன்னதானக்கூடம் மற்றும் பஞ்சாமிர்தம் விற்பனை நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் 'மெட்டீரியல் ரோப்கார்' மற்றும் மின் இழுவை ரெயில் மூலம் கோவிலுக்கு வருகிற பொருட்களை ஏற்றி செல்வதற்காக ரூ.2 லட்சம் மதிப்பிலான மின்சார வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக வழங்கினார். இந்த வாகனம் மூலம் பஞ்சாமிர்தம் மற்றும் அன்னதான பொருட்களை விரைவாக எடுத்து செல்ல முடியும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.