கோஷ்டி மோதலில் 3 பேர் மீது திராவகம் வீச்சு

வேலூர் அருகே இருதரப்பினர் இடையே நடந்த கோஷ்டி மோதலில் 3 பேர் மீது திராவகம் வீசப்பட்டது. இது தொடர்பாக நகை தொழிலாளி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-06-02 16:52 GMT

தாயம் விளையாட்டு

வேலூரை அடுத்த கருகம்புத்தூரை சேர்ந்தவர் குமார் (வயது 43), நகை பாலீஸ் போடும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள கன்னிக்கோவில் அருகே நண்பர்கள் ராஜி (28), சேட்டு ஆகியோருடன் சேர்ந்து தாயம் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ், செல்வம், மகேந்திரன் ஆகியோர் அவர்களின் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். சிறிதுநேரம் கழித்து தாயம் விளையாடுவது தொடர்பாக செல்வம் 3 பேருக்கும் மாறி, மாறி சொல்லி கொடுத்துள்ளார்.

இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குமார் அருகே வைத்திருந்த பீர்பாட்டிலை எடுத்து செல்வத்தை அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவரின் தம்பி ராஜேஷ் அதனை தடுத்துள்ளார். இதையடுத்து குமார் பீர்பாட்டிலால் ராஜேஷ் தலையில் அடித்துள்ளார். அதில் ரத்த காயம் அடைந்த அவரை உடனடியாக செல்வம், மகேந்திரன் ஆகியோர் சிகிச்சைக்காக கொணவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

திராவகம் வீச்சு

சிகிச்சைக்கு பின்னர் ராஜேஷ், செல்வம், மகேந்திரன் மற்றும் வினோத்குமார் ஆகியோர் குமாரின் வீட்டிற்கு சென்று பீர்பாட்டிலால் அடித்தது குறித்து கேட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த குமார், ராஜி, சேட்டு ஆகியோருக்கும், ராஜேஷ் உள்பட 4 பேருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். அப்போது குமார் வீட்டில் வைத்திருந்த பீர்பாட்டிலை எடுத்து வந்து செல்வத்தின் தலையில் அடித்தார்.

அதன்பின்னரும் ஆத்திரம் அடங்காத அவர் மீண்டும் வீட்டிற்குள் சென்று நகை பாலீஷ் போடுவதற்காக வைத்திருந்த திராவகத்தை எடுத்து வந்து செல்வம் உள்பட 4 பேர் மீதும் வீசியதாக கூறப்படுகிறது. இதில் செல்வம், மகேந்திரன், வினோத்குமார் ஆகியோரின் முகம், மார்பு, கால் உள்ளிட்ட இடங்களில் திராவகம் பட்டு காயம் ஏற்பட்டு அலறி துடித்தனர். அதிர்ஷ்டவசமாக ராஜேஷ் மீது திராவகம் படவில்லை.

2 பேர் கைது

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் காயமடைந்த செல்வம், மகேந்திரன், வினோத்குமார் மற்றும் குமார் ஆகியோரை சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிந்து குமார், ராஜி ஆகியோரை கைது செய்தார். மேலும் இதில் தொடர்புடைய சேட்டுவை தேடி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்