காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலியானார்கள்.

Update: 2022-07-25 08:21 GMT

மோட்டார் சைக்கிள் மோதியது

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த கரசங்கால் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரேமா (வயது 57). இவர் அந்த பகுதியில் உள்ள கூட் ரோட்டில் இட்லி கடை நடத்தி வந்தார்.

இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது தாம்பரத்தில் இருந்து படப்பை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் பிரேமா மீது மோதியது.

சாவு

இதில் பிரேமா சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரும் காயம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் மற்றும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் காயமடைந்த நபரை படப்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். போலீஸ் விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் காந்தி தெருவை சேர்ந்த சவுந்தர பிரபு (வயது 31) என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு விபத்து

சென்னையை அடுத்த நன்மங்கலம் பெருமாள் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கேசவன் (62). ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவர், நேற்று முன்தினம் மேற்கு மாம்பலத்தில் உள்ள உறவினரை பார்க்க தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். மடிப்பாக்கம் அருகே மேடவாக்கம் சாலையில் வந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி இவர் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த கேசவன் மீது லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய கேசவன், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவரான திரிசூலத்தை சேர்ந்த முத்துப்பாண்டி (54) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் ஒரு விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்த நபர் வெள்ளை சட்டையும் கோல்டுகலர் கரை போட்ட வேட்டியும், பச்சை நிற ஜட்டியும் அணிந்திருந்தார் பாக்கெட்டில் சிறிய தைல டப்பா ஒன்று இருந்தது. அவர் நேற்று முன்தினம் மாலை முதல் அச்சரப்பாக்கத்தில் சுற்றி திரிந்துள்ளார். வாய் பேச முடியாதவர் போல் இருந்துள்ளார். அவருக்கு 50 வயது இருக்கும். இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

இது குறித்து அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்