கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம்

திருக்கடையூர் பகுதியில் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக எடுத்து செல்ல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-03-03 18:45 GMT

திருக்கடையூர்:

திருக்கடையூர் பகுதியில் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக எடுத்து செல்ல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பா அறுவடை பணி

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணி நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது.

இங்கு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு நுகர் பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு அரவைக்காக வெளிமாவட்டங்களில் உள்ள ஆலைகளுக்கு சரக்கு ரெயில்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்

இந்த நிலையில் திருக்கடையூர், ஆக்கூர் உள்ளிட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் பல நாட்களாக தேக்கம் அடைந்து கிடக்கிறது. கொள்முதல் செய்து உடனடியாக கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திருக்கடையூரை சேர்ந்த விவசாய பாதுகாப்பு சங்க தலைவர் ராமமூர்த்தி கூறுகையில், சம்பா நெல் அறுவடை பணியின் போது பருவம் தவறி மழை பெய்தது. இதனால் அறுவடை பணி பாதிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்தன.

லாரிகள் வரவில்லை

மழையில் இருந்து தப்பிய நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையத்துக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றால் ஏற்கனவே கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மலை போல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

10 நாட்களாக கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை எடுக்க லாரிகள் வரவில்லை. அப்படியே வந்தாலும் ஓரிரு லாரிகள் தான் வருகின்றன. நெல் மூட்டைகள் எடுத்துச் செல்லப்படாமல் உள்ள முக்கிய காரணம் லாரிகள் தட்டுப்பாடு தான் என கூறப்படுகிறது. இதனால் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

நடவடிக்கை

நெல் மூட்டைகள் தேக்கம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் நிலையங்களில் விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்து வாங்கிய கடனை அடைக்கலாம் என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

எனவே கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக எடுத்துச் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்