"நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தால் பணத்தை இழந்தவர்கள் போலீசில் புகார் அளியுங்கள்"-மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அறிவுறுத்தல்

நியோமேக்ஸ் நிதி நிறுவன நிர்வாகிகளுக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தால் போதாது என்றும், அந்த நிறுவனத்தால் பணத்தை இழந்தவர்கள் உடனடியாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் எனவும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அறிவுறுத்தினார்.

Update: 2023-08-04 20:24 GMT

நியோமேக்ஸ் நிதி நிறுவன நிர்வாகிகளுக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தால் போதாது என்றும், அந்த நிறுவனத்தால் பணத்தை இழந்தவர்கள் உடனடியாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் எனவும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அறிவுறுத்தினார்.

நிதிநிறுவன மோசடி

மதுரையை தலைமை இடமாகக் கொண்டு நியோமேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை வழங்குவதாகவும், பின்னர் இரட்டிப்புத்தொகையை முதிர்வுத்தொகையாக வழங்குகிறோம் என ஆசை வார்த்தை கூறியதாக கூறப்படுகிறது. இதை நம்பி தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

ஆனால் அவர்கள் கூறியபடி, பணத்தை திருப்பி தரவில்லை என புகார் எழுந்தது. இந்த நிதி நிறுவனம், சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வரை மோசடி செய்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் நிதி நிறுவன இயக்குனர்கள் சிலர் கைதானார்கள். மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.

முன்ஜாமீன் மனு

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்ட மனு ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் தள்ளுபடியானது. நியோமேக்ஸ் மற்றும் துணை நிறுவன நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், கமலகண்ணன், நாராயணசாமி, மணிவண்ணன், செல்லம்மாள் உள்ளிட்ட சிலர் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

ஏற்கனவே இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, பொதுமக்களிடம் வசூலித்த தொகையை மனுதாரர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ததாக அரசு வக்கீல் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

புகார் அளிக்கவில்லை

அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் ரவி ஆஜராகி, நியோமேக்ஸ் நிறுவன நிர்வாகிகளுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று 50-க்கும் மேற்பட்டவர்கள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். அவர்களில் 15 பேர் தான் நியோமேகே்ஸ் நிறுவனத்தினரால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்று போலீசில் புகார் அளித்து உள்ளனர். மற்றவர்கள் இதுவரை எந்த புகாரும் அளிக்கவில்லை. அவ்வாறு இருக்கும்போது இந்த வழக்கில் எப்படி இடையீட்டு மனுதாரர்களாக அவர்களை அனுமதிக்க முடியும்? என வாதாடினார்.

அறிவுறுத்தல்

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, முன்ஜாமீன் அளிக்கக்கூடாது என இடையீட்டு மனுவை தாக்கல் செய்தால் மட்டும் போதாது. நியோமேக்ஸ் நிறுவனத்தினரால் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்தவர்கள் புகார் அளிக்காமல் இருந்தால், உடனடியாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி, அடுத்த கட்ட விசாரணையை வருகிற 10-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்