80 காலிமனைகளை வாங்கியவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்

80 காலிமனைகளை வாங்கியவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்துள்ளனர்.;

Update: 2022-12-23 20:08 GMT

திருவெறும்பூர் எலந்தப்பட்டி மற்றும் பல்வேறு பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவெறும்பூர் எலந்தப்பட்டி கிராமத்தில் சுமார் 3.44 ஏக்கர் நிலத்தை காலிமனைகளாக பிரித்து விற்பனை செய்ததன்பேரில் கடந்த 2009-ம் ஆண்டு 80 பேர் மனைகளை வாங்கி இருந்தோம். முறைப்படி இந்த மனைகளை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து இருந்தோம். தற்போது வரை இந்த சொத்து எங்களுடைய அனுபவத்தில் இருந்து வருகிறது. இந்தநிலையில் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வந்த பதிவு அஞ்சலில் மேற்படி நிலம் எங்களுக்கு பாத்தியப்பட்டது இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சென்று விளக்கம் கேட்டபோது, அந்த இடம் வேறு ஒருவருக்கு சொந்தமானது என்று கூறுகிறார்கள். நாங்கள் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்துவிட்டு வாங்கிய சொத்தை இத்தனை ஆண்டுகள் கழித்து எங்களுக்கு இல்லை என்று எப்படி மறுக்க முடியும். ஆகவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி எங்களது சொத்துக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

முன்னதாக அவர்கள் கோர்ட்டிற்கு நீதிபதியிடம் முறையிட சென்றனர். ஆனால் அவர்களை ஊழியர்கள் கோர்ட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. சிறிது நேரத்திற்கு பின்னர் அவர்கள் நீதிபதியிடம் மனு அளித்துவிட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்