தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழா தொடங்கியது
தூத்துக்குடி மறை மாவட்ட நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையொட்டி பிஷப் ஸ்டீபன் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது.
தூத்துக்குடி மறை மாவட்ட நூற்றாண்டு விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி பிஷப் ஸ்டீபன் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது.
நூற்றாண்டு விழா
தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டம் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் சுதேச ஆயர் திபூர்சியஸ் ரோச் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 7- வது பிஷப் ஸ்டீபன் பணியாற்றி வருகிறார். இவரது தலைமையில் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. நூற்றாண்டு விழா கொண்டாடத்தை முன்னிட்டு பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு 5 மறைவட்டங்கள் சார்பில் இளைஞர்கள் நூற்றாண்டு ஜோதியை தொடர் ஓட்டமாக கொண்டு வந்தனர். இதனை பிஷப் ஸ்டீபன் பெற்றுக்கொண்டு நூற்றாண்டு ஜோதியை ஏற்றி வைத்து, நூற்றாண்டு விழா தொடக்க சிறப்பு கூட்டுத்திருப்பலி நடத்தினார். முன்னதாக பங்கு தந்தையர்கள் 120 பேர் பேரணியாக அணிவகுத்து விழா மேடைக்கு வந்தனர்.
மரைன் கல்லூரி
இதில் முன்னாள் பிஷப் இவோன் அம்புரோஸ், மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம், பங்கு தந்தை சகாயம், தலைமையக செயலாளர் லூட்ரின் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து புறாக்கள் பறக்கவிடப்பட்டன. பின்னர் பிஷப் ஸ்டீபன் நூற்றாண்டு விழா முத்திரையை வெளியிட்டார். நூற்றாண்டு விழா கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து மறை மாவட்ட பங்குகளுக்கு கொடிகள் வழங்கப்பட்டன.
தொடக்க நிகழ்ச்சியில் ஆயர் ஸ்டீபன் மறைமாவட்ட மக்களுக்காக ஒரு மரைன் கல்லூரி, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பயிற்சி மையங்கள், மதுபோதை நோயாளிகள் மறுவாழ்வு மையம், நூற்றாண்டு விழா இணையதளம் தொடங்கப்படும் என்பது உள்ளிட்ட திட்டங்களை அறிவித்தார். இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தைகள் ரோலிங்டன், ஜேம்ஸ் விக்டர், சுந்தரிமைந்தன் உள்ளிட்டவர்கள் செய்து இருந்தனர்.