தூத்துக்குடி: மிளா உயிரிழந்த சம்பவம்; வனத்துறை ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்

பிரேத பரிசோதனையில் மிளாவின் கழுத்தில் சுருக்கு கயிறு போட்டதால் அதிர்ச்சி அடைந்த மிளா இறந்து இருப்பது தெரியவந்தது.

Update: 2022-11-29 11:28 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நேற்று முன் தினம் இரவு வழி தவறி மிளா என்று அழைக்கப்படும் கடமானை வனத்துறையினர் சுருக்கு கயிறு போட்டு பிடித்து உள்ளனர். அந்த மிளாவை காட்டில் கொண்டு விட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்து விட்டது. வனத்துறையினர் சுருக்கு கயிறு போட்டு பிடித்ததால், மிளாவின் கழுத்தில் கயிறு இறுக்கி மிளா இறந்ததாக பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார். வனத்துறை ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டார். மேலும் இறந்த மிளா உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் மிளாவின் கழுத்தில் சுருக்கு கயிறு போட்டதால் அதிர்ச்சி அடைந்த மிளா இறந்து இருப்பது தெரியவந்தது. இதனால் ஊருக்குள் புகுந்த மிளாவை பிடிக்க சரியான முறையை கடைபிடிக்க தவறியதாக வனவர் ஆனந்த், வனக்காப்பாளர் கந்தசாமி, வனக்காவலர் ஜோசுவா ஆகிய மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் உத்தரவிட்டார். மேலும் உடன்குடி பகுதியில் உள்ள மான்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்