தூத்துக்குடி ராம்தாஸ் நகர் முகாமில் வசிக்கும் இலங்கை அகதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக கலெக்டரிடம் புகார்

தூத்துக்குடி ராம்தாஸ் நகர் முகாமில் வசிக்கும் இலங்கை அகதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-06-27 13:21 GMT

தூத்துக்குடி ராம்தாஸ் நகர் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள தங்களுக்கு தனி அடையாள அட்டை உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கவிடாமல் தடுப்பதுடன், தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் இலங்கை அகதிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கூடுதல் கலெக்டர் சரவணன், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் வீரபுத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 350 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கல்குவாரியால் பாதிப்பு

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அரசர் குளம், வல்லகுளம் ஊர் மக்கள் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் புதிதாக தொடங்கப்பட்ட கல்குவாரி குடியிருப்பில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது. விவசாய நிலங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவிலும், மக்கள் அதிகமாக செல்லும் போக்குவரத்து சாலையில் இருந்து 50 மீட்டர் தொலைவிலும் அமைந்து உள்ளது. இந்த குவாரியில் வெடி வைக்கும் போது, வீடுகளில் அதிக அளவில் அதிர்வு ஏற்பட்டு சுவர்கள் விரிசல் அடைகிறது. ஆகையால் எங்கள் ஊரில் உயிர்ச்சேதத்தையும், பொருட்சேதத்தையும் முன்னெச்சரிக்கையாக தடுக்க உடனடியாக கல்குவாரியை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.

விளாத்திகுளம் கமலாபுரம் சுப்பிரமணியபுரம், துரைராஜ் நகர் பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் எந்த வித அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அநத பகுதியில் உள்ள பாலம் மிகவும் சேதம் அடைந்து காணப்படகிறது. இதனால் மக்கள் மழைக்காலங்களில் ஓடைநீரை கடந்து செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைகளை போர்க்கால அடிப்படையில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமையில் இயக்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், உடன்குடி அனல்மின்நிலைய பணிகளுக்காக கல்லாமொழி, குலசேகரன்பட்டினம், கீழ திருச்செந்தூர் பகுதிகளில் இருந்து சட்டத்துக்கு புறம்பாக மண் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மடடம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு லாரி ஒருதடவை மண் அள்ள சீட்டு போட்டு விட்டு பல முறை மண் அள்ளி செல்கின்றனர். உடனடியாக கனிம வளங்களை எடுத்து செல்லும் அனுமதி சீட்டை ரத்து செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அள்ளப்பட்ட கனிம வளங்கள் அளவை நிபுணர் குழு அமைத்து கணக்கீடு செய்து அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்பை சரி செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

இதே போன்று சமூக ஆர்வலர் குணசீலன் என்பவர் கொடுத்த மனுவில், உடன்குடி பஞ்சாயத்து யூனியனில் சட்டவிரோத மணல் கொள்ளையால் அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

பள்ளிக் கட்டிடம்

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மிளகுநத்தம் கிராம மக்கள் கலெக்டரிம் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் பஞ்சாயத்து யூனியன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் இடிதது அகற்றப்பட்டது. அதன்பிறகு பள்ளிக்கூடம் தனியார் கட்டிடத்தில் வாடகை கொடுத்து செயல்பட்டு வருகிறது. இதில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. ஆகையால் புதிய பள்ளிக்கூட கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

ஏரலை சேர்ந்த மாவட்ட காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஜெபசிங் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ஏரல் பகுதியில்ாசகசாலை அமைந்து உள்ளது. இந்த வாசக சாலை சிதிலம் அடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஆகையால் வாசக சாலைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

ஸ்டெர்லைட்

தூத்துக்குடி மீளவிட்டான், மடத்தூர். புதூர் பாண்டியபுரம். பண்டாரம்பட்டி. சில்வர்புரம், சங்கரபேரி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் தனித்தனியாக மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் எங்கள் கிராமத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த நிறுவனத்தால் கிராமத்தைச் சேர்ந்த பலர் வேலை வாய்ப்பை பெற்று வந்தனர். தற்போது இந்த ஆலை மூடப்பட்டு அதன் காரணமாக பலர் வேலை இழந்து உள்ளனர். பலர் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். எனவே இந்த ஆலையை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ஸ்டெர்லைட் சொத்துக்களை அரசுடமையாக்கி தூத்துக்குடியில் உயிர்ச்சூழலை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த இடத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வேளாண் சார்ந்த திட்டங்களை கொண்டு வரவேண்டும். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அங்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கூறி உள்ளனர்.

இலங்கை அகதிகள் மீது தாக்குதல்

தூத்துக்குடி ராம்தாஸ் நகர் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நாங்கள் கடந்த 30 ஆண்டுளாக ராம்தாஸ்நகர் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகிறோம். எங்களுக்கு கிடைக்க கூடிய இலங்கை அகதிக்கான தனி அடையாள அட்டை உள்ளிட்ட சலுகைகளை சிலர் அதிகாரிகள் துணையுடன் எங்களுக்கு கிடைக்கவிடாமல் தடுத்து, அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் வழங்கி வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்ட போது, சம்பந்தப்பட்டவர்கள் எங்களை தாக்கினர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி எங்களுக்கு நியாயம் கிடைக்கவும், உரிய சலுகைகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்