திருவையாறில் தியாகராஜர் 176-வது ஆராதனை விழாதமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜரின் 176-வது ஆராதனை விழாவை தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

Update: 2023-01-06 19:15 GMT

தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜரின் 176-வது ஆராதனை விழாவை தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

தியாகராஜர் ஆராதனை விழா

தஞ்சை மாவட்டம் திருவையாறில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு ஆண்டுதோறும் 5 நாட்கள் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக 2 நாட்கள் விழா நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு 6 நாட்கள் நடைபெற உள்ளது.

அதன்படி இந்த ஆண்டிற்கான 176-வது ஆராதனை விழா நேற்று தொடங்கியது. விழாவிற்கு தியாக பிரம்ம மகோத்சவ சபை தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார். சபை செயலாளர் அரித்துவாரமங்கலம் பழனிவேல் வரவேற்றார்.

புதுச்சேரி மற்றும் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வடக்கும், தெற்கும் இணைந்தால்...

ஆந்திர பிரதேசத்திலிருந்து தமிழகத்துக்கு வந்து இசைக்கு தொண்டாற்றிய தியாகராஜரின் எண்ணம் மிகவும் பிரம்மாண்டமானது. நாம் அனைத்து மதங்களையும் துதிக்கவும், மதிக்கவும் வேண்டும். அந்தந்த மதத்தில் உள்ள நல்லவற்றை புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் நமது கொள்கையாக இருக்க வேண்டும்.

வடக்கும், தெற்கும் இணைந்து பணியாற்றினால்தான் இந்த நாடு சுபிட்சமாக இருக்கும். தமிழ் நமக்கு உயிர்தான். ஆனாலும் மற்ற மொழிகளை கற்கவும், மதிக்கவும் வேண்டும். இன்னொரு மொழியை கற்கும்போதுதான் தமிழ் மொழியில் உள்ள நல்லவற்றை எடுத்து வடமொழிக்காரர்களுக்கு எடுத்து சொல்ல முடியும். தியாகராஜர் தமிழ்நாட்டில் அமர்ந்து கொண்டு தெலுங்கு கீர்த்தனைகளை பாடி உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களை ஈர்த்தார். இதன் மூலம் மொழியின் வல்லமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் தமிழில் எவ்வளவு பெருமைகள் இருக்கின்றன என்பதை மற்ற மொழிக்காரர்களுக்கு சொல்வதற்காக பிற மொழிகளை கற்றுக் கொள்வதை தடுக்க வேண்டாம்.

நோயை குணப்படுத்தும் ராகங்கள்

பாடல்களுக்கும், ராகங்களுக்கும் நோய்களை தீர்க்கும் சக்தி இருக்கிறது என்பதை நம்புகிறேன். தோடி ராகத்துக்கு மன நலத்தை சரி செய்யக்கூடிய குணம் இருக்கிறது என கூறுகின்றனர்.

எனவே குழந்தைகளுக்கு கீர்த்தனைகளையும், ராகங்களையும் அதிகமாக சொல்லிக் கொடுக்க வேண்டும். பைரவி ராகம் காச நோயைக் குணப்படுத்துவதாக சொல்லப்படுகிறது. நாம் இப்போது விஞ்ஞானத்தில் கண்டுபிடித்தவை அன்றே மெய்ஞானம் மூலம் திருவையாறில் நடந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் அறங்காவலர்கள் சந்திரசேகர மூப்பனார், சுரேஷ்மூப்பனார், கணேசன், பஞ்சநதம், டெக்கான்மூர்த்தி, சுந்தரம், பொருளாளர் கணேஷ், உதவி செயலளர்கள் கோவிந்தராஜன், அருண், பாபநாசம் அசோக்மணி, ராஜகோபாலன், ரவிச்சந்திரன், அம்மாப்பேட்டை வடக்கு வட்டார த.மா.கா. தலைவர் சுலைமான் பாட்சா மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சபை செயலாளர் ஸ்ரீ முஷ்ணம் ராஜாராவ் நன்றி கூறினார்.

அதனைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பஞ்சரத்ன கீர்த்தனைகள்

விழா வருகிற 11-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது. தியாகராஜர் முக்தி அடைந்த பகுளபஞ்சமி தினமான 11-ந் தேதி தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், தியாகராஜருக்கு மகா அபிஷேகமும் நடைபெறுகிறது.

இதில் 500-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்