எள் பயிர் சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு

எள் பயிர் சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு;

Update: 2023-06-20 12:32 GMT

முத்தூர்,

முத்தூர் நகர சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் எள் பயிர் சாகுபடி பரப்பு இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

எள் சாகுபடிக்கு

முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம் வேலம்பாளையம், மங்களப்பட்டி, பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, வள்ளியரச்சல், மேட்டுப்பாளையம் வருவாய் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

முத்தூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் இந்த ஆண்டு எள் சாகுபடி பரப்பு கணிசமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இப்பகுதி விவசாயிகள் 1 ஏக்கரில் எள் சாகுபடி செய்வதற்கு விதை எள், வயல் சமன் செய்தல், உழவு கூலி, அடி உரம் இடுதல், பாத்தி கட்டுதல், களை மேலாண்மை, மேல் உரம் இடுதல், எள் அறுவடை, எள் சுத்தம் செய்தல் என ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை முதலீடு செய்து உள்ளனர்.

எள் செடிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைத்ததால் அவை நன்கு பச்சை, பசேலென்று வளர்ந்து வெள்ளை நிறத்தில் பூக்கள் பூத்து, அயல் மகரந்த சேர்க்கை மூலம் எள் காயாக மாறி தற்போது காட்சியளிக்கின்றன.

எள் அறுவடை பணிகள்

இதனை தொடர்ந்து இப்பகுதி எள் சாகுபடி விவசாயிகள் கூலி ஆட்கள் மூலம் எள் அறுவடை பணிகளை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கினர். பின்னர் எள் செடிகளில் இருந்து அறுவடை செய்த கருப்பு ரகம் மற்றும் சிவப்பு ரகம் எள்ளை முத்தூர், வெள்ளகோவில், காங்கயம் மற்றும் ஈரோடு மாவட்டம் சிவகிரி, அவல் பூந்துறை, கொடுமுடி - சாலைப்புதூர் ஆகிய பகுதிகளில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு நேரில் கொண்டு சென்று இடைத்தரகு ஏதுமின்றி டெண்டர் ஏல முறையில் விற்பனை செய்து பலன் அடைந்து வருகின்றனர். இதன்படி இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சிவப்பு ரக எள் தரத்திற்கு ஏற்ப ஒரு கிலோ ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் ஒரு சில விவசாயிகள் தனியார் எள் வியாபாரிகளுக்கு கால சூழ்நிலைக்கேற்ப எள்ளை உரிய விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக எள் பயிர் சாகுபடிக்கு கூடுதல் விலை கிடைத்து வருவதால் இந்த ஆண்டும் எள் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி உள்ளனர். இதனால் முத்தூர் சுற்று வட்டார கீழ்பவானி பாசன இந்த ஆண்டும் வழக்கத்தை விட எள் சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்