ஜெனகை மாரியம்மன் கோவில் தீர்த்தவாரி திருவிழா

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் தீர்த்தவாரி திருவிழா வைகையாற்றில் விடிய விடிய நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2022-06-22 18:38 GMT

சோழவந்தான், 

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் தீர்த்தவாரி திருவிழா வைகையாற்றில் விடிய விடிய நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குவிந்தனர்.

வைகாசி திருவிழா

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 17-வது நாள் திருவிழாவில் தீர்த்தவாரி திருவிழா நடந்தது. இதையொட்டி மாலை 4 மணிஅளவில் திருவிழா கொடி இறக்கம் நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சள் நீராடுதல் நடந்தது. அம்மன் கேடயத்தில் வைகை ஆற்றுக்கு எழுந்தருளினார்.

பெண்கள் ஊர்வலமாக முளைப்பாரி எடுத்து அம்மனுடன் வைகை ஆற்றுக்கு சென்றனர். மகளிர் குழு சார்பாக அம்மனுக்கு முன்பு கோலாட்டம் நடந்தது. இங்கு அம்மனுக்கு 12 அபிஷேகங்கள் நடைபெற்றன. தீர்த்தவாரி மேடையில் வண்ணவண்ண பூக்கள், மின் அலங்காரத்துடன் அம்மன் ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி நடந்தது. அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்தார்.

விழாவையொட்டி வைகை ஆற்றில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தீர்த்தவாரி மண்டகப்படி உபயதாரர் பால்பாண்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். விழாவில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., பேரூராட்சி மன்ற தலைவர்கள் சோழவந்தான் ஜெயராமன், வாடிப்பட்டி பால்பாண்டி, ஒன்றிய கவுன்சிலர் வசந்தகோகிலா சரவணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், முன்னாள் துணைசேர்மன் அண்ணாதுரை, மாவட்ட மாணவரணி செயலாளர் மருதுபாண்டியன், துணைத்தலைவர் லதாகண்ணன், வார்டுகவுன்சிலர்கள் மருதுபாண்டியன், வக்கீல் சத்யபிரகாஷ், ஈஸ்வரிஸ்டாலின், முத்துச்செல்வி சதீஷ்குமார், செந்தில்வேல், குருசாமி மற்றும் கோவில் செயல்அலுவலர் இளமதி, கோவில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முளைப்பாரி

தீர்த்தவாரி திருவிழாவையொட்டி தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சோழ வந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகே வெங்கடேசன் எம்.எல்.ஏ. அன்னதானம் வழங்கினார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நேற்று இரவு பேட்டை கிராமத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விதவிதமாக முளைப்பாரி எடுத்து வந்தனர். இன்று அதிகாலை வைகை ஆற்றில் இருந்து ரிஷபவாகனத்தில் அம்மன் புறப்பட்டு கோவிலை வந்தடைவார். இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்