திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டார் கோவில் கும்பாபிஷேகம்
திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டார் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்;
திருவெண்ணெய்நல்லூர்
மெய்கண்டார் கோவில்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மெய்கண்டார் கோவில் உள்ளது. இக்கோவில் உலகிற்கு சிவஞான போதத்தை அருளிய மெய்கண்டார் சுவாமிகள் முக்தியடைந்த திருத்தலமாகும்.
இக்கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதுவரை ராஜகோபுரம் இல்லாத இக்கோவிலில் புதியதாய் ராஜகோபுரம் கட்டப்பட்டும், புதிதாய் பைரவருக்கு கோவில் கட்டியும், கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.
கும்பாபிஷேகம்
அதன்படி இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 15-ந் தேதி காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் தொடங்கியது. இரவு 8 மணிக்கு வள்ளி திருமண பொம்மலாட்டமும் நடைபெற்றது. தொடர்ந்து 16-ந் தேதி் காலை 8.30 மணிக்கு 2-வது கால யாக பூஜையும், மாலை 5.30 மணிக்கு 3-வது கால யாக பூஜையும், இரவு 8 மணிக்கு திருவையாறு சுவாமிநாதனின் வீணைக்கச்சேரியும் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை 6.30 மணிக்கு 4-வது கால யாக பூஜையும், காலை 8.30 மணிக்கு மஹாபூர்ணாஹூதியும் நடைபெற்றது. பின்னர், காலை 9 மணியளவில் யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்று திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து. பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மெய்கண்டார் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது.
வெள்ளி பல்லக்கில் வீதி உலா
இதில் திருவெண்ணெய்நல்லூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 8 மணிக்கு மெய்கண்டார் புதிய வெள்ளி பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீன நிர்வாகிகள், ஸ்ரீமத் திருச்சிற்றம்பலத் தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
விழுப்புரம் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.