திருவள்ளூர் ரெயில் விபத்து; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல்
ரெயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.;
சென்னை,
மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ரெயில் வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதி விபத்து ஏற்பட்டது.
ரெயில்கள் மோதிக்கொண்ட வேகத்தில் சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. மணிக்கு 109 கி.மீ. வேகத்தில் சென்ற ரெயில், விபத்து நடந்த இடத்தில் 90 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளது. ஒடிசா ரெயில் விபத்து போல், சிக்னல் கோளாறு காரணமாக கவரப்பேட்டையில் ரெயில் விபத்து நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தால் பயணிகள் விரைவு ரெயிலின் ஏசி பெட்டிகள் தடம் புரண்டன. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திகு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனிடையே, ரெயில் விபத்தில் காயமடைந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பயணிகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கவரப்பேட்டை ரெயில் விபத்து மீட்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மீட்பு பணிகளை துரிதப்படுத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் மீட்கப்பட்ட பயணிகளை பிரத்யேக வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பயணம் செய்ய முடியாதவர்களை அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றை வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அதோடு, ரெயில் விபத்துகள் தொடர்கதையாவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.