திருவள்ளூர் மாணவி மரணம்: 3 சிறப்பு தனிப்படை அமைத்து சிபிசிஐடி உத்தரவு
திருவள்ளூர் மாணவி மரணம் தொடர்பாக 3 சிறப்பு தனிப்படை அமைத்து சிபிசிஐடி உத்தரவிட்டுள்ளது.;
திருவள்ளூர்,
திருவள்ளூர் 12ம் வகுப்பு மாணவி சரளா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை டிஎஸ்பி செல்வகுமார் தலைமையில் 3 சிறப்பு தனிப்படை அமைத்து சிபிசிஐடி உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்பு தனிப்படை மாணவி தற்கொலை செய்துகொண்டது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கின் முழுவிவரம்:-
திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:- பிளஸ்-2 மாணவி திருவள்ளூர் அருகே மப்பேடு அடுத்த கீழசேரியில் 'சேக்ரட் ஹார்ட்' பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்ற அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திருத்தணியை அடுத்த சூரியநகரம் தெக்கனூர் காலனியை சேர்ந்த பூசனம்-முருகம்மாள் தம்பதியின் மகள் சரளா (வயது 17) என்பவர் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாணவி சரளா பள்ளி சீருடை அணிந்து விடுதியில் இருந்து பள்ளிக்கு புறப்பட தயாரானார். முன்னதாக சக மாணவிகளுடன் கேண்டீனில் சாப்பிட சென்றார்.
பின்னர் திடீரென அவர் மட்டும் தனியாக விடுதியில் உள்ள முதல் மாடிக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சக மாணவிகள் அங்கு சென்று அவரை தேடினர். ஆனால் அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. விடுதி அறையில் இருந்த மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் சரளா பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்து அலறிய மாணவிகள் கூச்சலிட்டனர். உடனே இதுகுறித்து விடுதி பொறுப்பாளர் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பள்ளி நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளிக்கு விடுமுறை சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாண், திருவள்ளூர் டி.எஸ்.பி. சந்திரதாசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் விரைந்தனர். இதைத்தொடர்ந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பள்ளி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் உடனடியாக அந்த பள்ளிக்கு விடுமுறை அளித்தது. பெற்றோர்கள் போராட்டம் சரளா தங்கியிருந்த விடுதியில் அவருடன் 85 மாணவிகள் தங்கி உள்ளனர். மாணவி தற்கொலை செய்துகொண்ட தகவல் காட்டுத்தீ போல் பரவியதை தொடர்ந்து மற்ற மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி வளாகம் முன்பு திரண்டு தங்கள் மகள்களை பார்க்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.அதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு மாணவியின் தாயார் மயங்கி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பெற்றோர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர். பள்ளி முற்றுகை மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும் அவரது உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் டி.ஐ.ஜி. சத்யபிரியா கூறியதாவது:- சி.பி.சி.ஐ.டி. விசாரணை பள்ளி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு உடனடியாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும் இறந்த மாணவியின் இறப்பு சம்பந்தமாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் யாரும் வதந்தியை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அசம்பாவிதத்தை தடுக்க காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி சத்யபிரியா தலைமையில் திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாண், காஞ்சீபுரம் சூப்பிரண்டு சுதாகர் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு அவர்கள் பள்ளி வளாகம் முன்பும், மாணவி தற்கொலை செய்து கொண்ட விடுதியின் முன்பும் குவிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் மாணவியின் உடல் வைக்கப்பட்டிருந்த திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உடலை வாங்க மறுப்பு இதற்கிடையே மாணவியின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்றும் மாணவியின் உறவினர்கள் உறுதியாக தெரிவித்து விட்டனர்.