விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் திருவாடானை யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தல்
விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என திருவாடானை யூனியன் கூட்டத்தில் வலிறுத்தப்பட்டது.;
தொண்டி
.பயிர் காப்பீட்டு தொகை
திருவாடானை ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் யூனியன் தலைவர் முகமது முக்தார் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலைராஜன், சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் வரவேற்றார். கூட்டத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் திருவாடானை யூனியனுக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் பழுதடைந்த நிலையிலும், முற்றிலும் சேதமடைந்த நிலையிலும் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள அரசுக்கு சொந்தமான பள்ளி கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்துவது.
கடந்த ஆண்டு திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் போதிய மழை இல்லாமல் பாதிக்கப்பட்ட 57 வருவாய் கிராம விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையை தனியார் பயிர் காப்பீட்டு நிறுவனம் உடனடியாக வழங்கிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடிப்படை தேவைகள்
தொடர்ந்து பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த அரசு திட்டங்கள் குறித்து எடுத்து கூறினர். பின்னர் ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான சாலை, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்தும் கோரிக்கை வைத்து பேசினர்.
கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வைதேகி, உதவி மின் பொறியாளர் விஜயன், ஒன்றிய பொறியாளர் பாலகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.