பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் 60 பவுன் நகைகள்- ரூ.1¼ லட்சம் திருட்டு

Update: 2022-09-02 13:31 GMT


திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் 60 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை திருடிய கார் டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

60 பவுன் நகை திருட்டு

திருப்பூர் குமார் நகரைச் சேர்ந்தவர் முத்துவேல் (வயது 40). பனியன் நிறுவன உரிமையாளர். இவரது கார் டிரைவராக திண்டுக்கல்லை சேர்ந்த முருகன் (33) என்பவர் பணியாற்றி வந்தார். முத்துவேல் கடந்த மாதம் 30-ந்தேதி தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் கோவை மாவட்டம் அன்னூர் சென்றார். தனது பங்களா வீட்டு கதவை பூட்டு போடாமல் அப்படியே சாத்திவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் அன்று மாலை முத்துவேல் வீடு திரும்பினார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 60 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், 3 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது. வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே வந்த ஆசாமிகள், பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடியது தெரிய வந்தது. ஆனால் வீட்டில் வழக்கமாக பீரோ சாவி வைத்திருந்த இடத்தில் இருந்து சாவியை எடுத்து திருடியது சந்தேகத்தை கிளப்பியது.

நண்பர்களுக்கு தகவல்

உடனடியாக இது குறித்து திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். முதல்கட்ட விசாரணையில், முத்துவேலுக்கு நன்கு தெரிந்தவர்களே இந்த திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டனர்.

சந்தேகத்தின் பேரில் டிரைவர் முருகனை பிடித்து விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, 'முருகனுக்கு அதிகம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. முத்துவேல் வீட்டில் நகை, பணம் அதிகம் இருப்பதும், சாவியை அங்கேயே வைத்து விட்டு அவர்கள் செல்வதையும் அறிந்த முருகன், தனது நண்பர்களான கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த தங்கதுரை (35), நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த முருகவேல் (34) ஆகியோரிடம் கூறியுள்ளார்.

3 பேர் கைது

சம்பவத்தன்று முத்துவேல் காரில் வெளியூர் சென்றார். முருகன் காரை ஓட்டி சென்றார். அப்போது தனது நண்பர்களுக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 30-ந் தேதி மதியம் தங்கதுரை, முருகவேல் இருவரும் வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தை திருடி விட்டு தப்பியுள்ளனர். தங்கதுரையும், முருகவேலும் சமையல் தொழிலாளிகள்' என்றனர்.

பின்னர் தனிப்படை போலீசார் தங்கதுரை, முருகவேல் ஆகியோரை பிடித்து அவர்களிடம் இருந்து 60 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், 3 கிலோ வெள்ளிபொருட்கள் ஆகியவற்றை மீட்டனர்.

இது தொடர்பாக வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், தங்கதுரை, முருகவேல் ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்