திரவுபதியம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி
திருத்தணி திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் திரவுபதியம்மனுக்கும், அர்ஜூனன் பெருமானுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.;
திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை 7.30 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சந்தனகாப்பு மற்றும் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது. மதியம் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மகா பாரத சொற்பொழிவும், மாலையில் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலம் மற்றும் இரவு 10 மணிக்கு மகாபாரத நாடகமும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று நண்பகல் கோவில் வளாகத்தில் திரவுபதியம்மனுக்கும், அர்ஜூனன் பெருமானுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஒரு யாகசாலை அமைத்து கணபதி ஹோமம் மற்றும் நவகிரக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து உற்சவர் அர்ஜூனன், திரவுபதியம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் திருமண விருந்தும் வழங்கப்பட்டது. வரும் 21-ந் தேதி காலையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும் மாலை 6.30 மணிக்கு தீமிதி விழா நடைபெறுகிறது.