திருமங்கலம் ரெயில்வே கேட் மூடல்; வாகன ஓட்டிகள் அவதி
பராமரிப்பு பணிக்காக திருமங்கலம் ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மாற்று வழியில் சென்றால் நெரிசலில் அவதிப்பட்டனர்.;
திருமங்கலம்,
பராமரிப்பு பணிக்காக திருமங்கலம் ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மாற்று வழியில் சென்றால் நெரிசலில் அவதிப்பட்டனர்.
ரெயில்வே கேட் மூடல்
திருமங்கலம் ெரயில் நிலையம் அருகே விமான நிலையம் செல்லும் ரோட்டில் ெரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த கேட்டை தாண்டி தான் புறநகர் பகுதிகளான காமராஜபுரம், கற்பகநகர், சோனைமீனாநகர், ஆறுமுகம் தெருக்கள், மதுராசிட்டி மற்றும் சுங்குராம்பட்டி, விரிசங்குளம், விடத்தகுளம், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லமுடியும்.
இந்த ரெயில்வே கேட் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டது. இது குறித்து அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
வாகன நெரிசல்
எனவே காமராஜபுரம், கற்பகம்நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் அருகேயுள்ள தெற்குதெரு ரெயில்வே கேட் அல்லது வடகரை ரெயில்வே சுரங்க வழிபாதையை பயன்படுத்தி 3 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் சூழல் ஏற்பட்டது.. அதுவும் நெருக்கடியான பாதை என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விமான நிலைய சாலை ரெயில்வே கேட் தினந்தோறும் 70 தடவைக்கு மேல் ரெயில்வே கேட் அடைக்கப்படுவதால் இப்பகுதியில் செல்லும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் தினந்தோறும் 10 முதல் 20 நிமிடங்கள் நின்று செல்கிறது.
தினந்தோறும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பராமரிப்புக்காக மாதம் ஒன்று அல்லது 2 முறை அடைக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் சூழல் ஏற்பட்டு வருகிறது.
மேம்பாலம் கட்ட வேண்டும்
எனவே வாகன ஓட்டிகளின் அவதியை கருத்தில் கொண்டு இப்பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.