சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம்

தூத்துக்குடி சிவன் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்;

Update: 2022-10-22 18:45 GMT

தூத்துக்குடி சிவன் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

ஐப்பசி திருவிழா

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழா முக்கியமான ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்பாள் சப்பரம், கிளி வாகனம், அன்னபட்சி வாகனம், சிம்ம வாகனம், வெள்ளி மயில் வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், காமதேனு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடந்தது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 20-ந் தேதி நடந்தது. தேரோட்டத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் பாகம்பிரியாள் சிவ பூஜை செய்யும் அலங்காரத்தில் பூம்பல்லக்கில் ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருக்கல்யாணம்

நேற்று பாகம்பிரியாள் சங்கர ராமேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகம் தீபாராதனை நடத்தப்பட்டு, அம்பாள் தபசுக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடந்தது.

மாலையில் சுவாமி-பாகம்பிரியாள் அம்பாளுக்கு காட்சி தருதல் மற்றும் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், இரவில் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணமும், பட்டினப்பிரவேசம் செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி, தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்