பூலோகநாதர் கோவிலில் ஒரே நேரத்தில் சிவன், பெருமாளுக்கு திருக்கல்யாணம்
நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் ஒரே நேரத்தில் சிவன், பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பத்தில் 1000 ஆண்டு பழமை வாய்ந்த புவனாம்பிகை உடனுறை ஸ்ரீ பூலோகநாதர் மற்றும் அலமேலு மங்கை தாயார் சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 13-ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பூலோகநாதர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாசலபதிக்கும், புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர்சாமிக்கும் ஒரே நேரத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரம்
இதில் சிறப்பு அலங்காரத்தில் சாமிகள் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து பெருமாள்- தாயார் மற்றும் சிவன்- அம்மனுக்கும் மங்கள வாத்தியம் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. ஒரே மேடையில் ஒரே சமயத்தில் சிவனுக்கும், பெருமாளுக்கும் திருமணம் நடந்ததால் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகாதேவி மற்றும் பூஜைக்கான ஏற்பாடுகளை குருக்கள் குமார், ஹரி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.