அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

பழனி அருகே அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று திருக்கல்யாணம் நடந்தது.;

Update: 2023-09-01 22:30 GMT

பிரம்மோற்சவ விழா

பழனி அருகே பாலசமுத்திரத்தில் பிரசித்தி பெற்ற அகோபில வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இங்கு ஆண்டுதோறும் ஆவணி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து தினமும் காலை 7 மணிக்கு அகோபில வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவியுடன் சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. அதேபோல் இரவில் அனுமன், பவளக்கால், கருடன், சேஷம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் 7-வது நாளான நேற்று அகோபில வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

திருக்கல்யாணம்

இதையொட்டி மாலை 5 மணிக்கு அகோபில வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமிக்கு மாப்பிள்ளை அலங்காரம் செய்யப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க வரதராஜப்பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவிக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து மாலை மாற்றுதல், தேங்காய் உருட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

அதையடுத்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு 8 மணிக்கு சுவாமி ஸ்ரீதேவி-பூதேவியுடன் பவளக்கால் சப்பரத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்