திண்டிவனம் சலூன் கடை ஊழியரை அடித்துக் கொன்ற வாலிபர் கைது

மதுபோதையில் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. திண்டிவனம் சலூன் கடை ஊழியரை அடித்துக் கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2023-04-06 18:45 GMT

மயிலம்:

திண்டிவனம் கிடங்கல்-1 ஒத்தவாட தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மகன் கோகுல்ராஜ்(வயது 31). இவர் அதே தெருவில் உள்ள ஒரு சலூன் கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவருக்கும், வானூர் தாலுகா நேர்குணத்தை சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு லீனா(4) என்ற மகள் இருக்கிறாள்.

இந்த நிலையில் மயிலம் முருகன் கோவிலில் நடைபெற்ற பங்குனி உத்திர தேரோட்டத்தை காண்பதற்காக கோகுல்ராஜ் கடந்த 3-ந் தேதி இரவு தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். கடந்த 4-ந் தேதி காலையில் மயிலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள ஒரு புளியமரத்தடியில் கோகுல்ராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

போலீசில் தாய் புகார்

இது பற்றி தகவல் அறிந்ததும் மயிலம் போலீசார் விரைந்து சென்று கோகுல்ராஜூன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மதுபோதையில் கோகுல்ராஜ் இறந்திருக்கலாம் என்று சந்தேகித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே பிரேத பரிசோதனையில், கோகுல்ராஜூன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததும், உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்டு இருப்பதும் தெரிந்தது.

அடித்துக் கொன்றது அம்பலம்

இதன் தொடர்ச்சியாக மயிலம் போலீசில் பவானி புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறும் கூறியிருந்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மயிலம் கொல்லியங்குணத்தை சேர்ந்த ரமேஷ்(35) என்பவர் கோகுல்ராஜை உருட்டு கட்டையால் அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரமேசை போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்