காங்கயம் அருகே 2 பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட திருடனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பெண்களிடம் வழிப்பறி
நத்தக்காடையூர் அருகே உள்ள பறையகாட்டுவலசு பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினாம்பாள் (வயது 55). இவர் நேற்று மதியம் 1 மணியளவில் பாறையகாட்டுவலசில் இருந்து திட்டுபாறை செல்லும் வழியில் அரண்மனை தோட்டம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் ஸ்கூட்டரில் சென்ற மர்ம ஆசாமி, ரத்தினாம்பாள் அணிந்திருந்த சங்கிலியை பறிக்க முயன்றார். ஆனால் ரத்தினாம்பாள் சத்தம் போட்டதால் அந்த மர்ம ஆசாமி அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார்.
இதே மர்ம ஆசாமி இதே சாலையில் குருக்கல்பாளையம் அருகே சாலையில் நடந்து சென்ற நிர்மலாதேவி (40) என்பவரிடம் நகையை பறிக்க முயன்றார். ஆனால் அவரால் சங்கிலியை பறிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து நிர்மலாதேவி சத்தம் போட்டு அருகில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் மர்ம ஆசாமியை பின் தொடர்ந்து துரத்திச்சென்றனர்.
மர்ம ஆசாமி போலீசில் ஒப்படைப்பு
அப்போது திட்டுப்பாறை அருகே உள்ள சிவியார்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தை சாலையில் போட்டுவிட்டு காட்டு பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டான். பின்னர் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த பகுதியை சுற்றிவளைத்து, காட்டில் மறைந்திருந்த திருடனை மடக்கி பிடித்தனர்.
பின்னர் காங்கயம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த காங்கயம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மர்ம ஆசாமியை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டவன், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், இந்திராகாலனி பகுதியைச் சேர்ந்த மரியராஜ் (30) என்பது தெரியவந்தது.
இவர் கடந்த 15 நாட்களாக விஜயமங்கலம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி ஒரு பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். வழிப்பறியில் ஈடுபட்ட திருடனை கைது செய்த காங்கயம் போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். மரியராஜ் மீது குற்ற சம்பவங்கள் குறித்த பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
-------