முதியோர் உதவித்தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு மூதாட்டியை தூக்கி வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க அனுமதி மறுத்ததால் கருணைக்கொலை செய்யுமாறு மாற்றுத்திறனாளி கண்ணீர் மல்க கலெக்டரிடம் முறையிட்டார்.
மூதாட்டியை தூக்கி வந்தனர்
சேலம் தாதகாப்பட்டி சஞ்சீவிராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 83). இவருக்கு கடந்த 7 மாதங்களாக முதியோர் உதவித்தொகை வழங்கப்படவில்லையாம். இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ளார்.
இதையடுத்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் நேற்று செல்லம்மாளை தூக்கிக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது, அவர்கள் மூதாட்டிக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு மீண்டும் உதவித்தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேசி சமாதானப்படுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.
உதவித்தொகை
இதுகுறித்து மூதாட்டி செல்லம்மாள் கண்ணீர் மல்க கூறுகையில், ரூ.200 முதியோர் உதவித்தொகையில் இருந்து வாங்கி வருகிறேன். அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளாக ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. கடந்த 7 மாதங்களாக அந்த உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தனது மருத்துவ செலவு மற்றும் சாப்பாட்டுக்கு கடும் சிரமமாக உள்ளது. தற்போது பணம் இல்லாமல் வறுமையில் வாடுகிறேன். எனது பிள்ளைகளும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். எனவே, மீண்டும் முதியோர் உதவித்தொகை கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ரூ.3 லட்சம் மோசடி
இதேபோல், சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாந்தி (60) என்பவர் தனது உறவினர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தார். அதில், ஒருவரிடம் ஏலச்சீட்டு சேர்ந்து மாதா மாதம் பணம் செலுத்தி வந்தேன். ஆனால் சீட்டு முடிவடையும் தருவாயில் அதனை நடத்தி வந்தவர், 2015-ம் ஆண்டு அவசரமாக ரூ.3 லட்சம் கடன் கேட்டார். அதை நம்பி நானும் பணம் கொடுத்தேன். ஆனால் 8 ஆண்டுகள் ஆகியும் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தெரிவித்திருந்தார்.
தர்ணா போராட்டம்
ஓமலூர் அருகே பனங்காடு பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (36). மாற்றுத்திறனாளியான இவர், தமிழக அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவரது கிராமத்தில் உள்ள பொது குடிநீர் குழாயில் சிலர் தண்ணீர் பிடிப்பதற்கு அனுமதி மறுப்பதாக கூறி அலெக்சாண்டர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரை போலீசார் மற்றும் அதிகாரிகள் சமாதானப்படுத்தி கலெக்டர் கார்மேகத்திடம் மனு அளிக்க அழைத்து சென்றனர்.
அவரிடம், கலெக்டர் கார்மேகம் விசாரித்தார். அப்போது, எங்களது கிராமத்தில் எனது குடும்பத்தினருக்கு மட்டும் பொது குழாயில் தண்ணீர் பிடிக்க விடுவதில்லை என்றும், இதனால் எனது குடும்பத்தினரை கருணை கொலை செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். இதனை கேட்டறிந்த கலெக்டர், தண்ணீர் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் அலெக்சாண்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.