சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்களால் பரபரப்பு
பெரம்பலூரில் சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் நகராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட அன்பு நகரில் வசிக்கும் பொதுமக்களில் சிலர் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி மற்றும் நகராட்சி பொறியாளர் முத்துசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவா்களை தடுத்து நிறுத்தி கோரிக்கைகளை கேட்டறிந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், பள்ளமாக உள்ள தெருக்களில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும். தெரு விளக்குகளை சரி செய்ய வேண்டும். சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடையின் உயரத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும், என்றனர். அதற்கு நகராட்சி அலுவலர்கள் மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.