வாழப்பாடி
வாழப்பாடி அருகே சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் வரதராஜபெருமாள் மற்றும் தொட்டியத்து மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகள், தேர் செல்லும் தெற்குவீதி மற்றும் நடுவீதி பாதையில் உள்ள வீடுகளை அகற்ற வேண்டும் என கோவில் நிர்வாகம் தரப்பில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று அரசு நிலத்தில் உள்ள வீடுகளை அகற்றும் பணி நடந்தது. தேர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுளை அகற்ற வீட்டின் முன்பக்கத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்க தொடங்கினர். மாலை 5 மணிளவில் சீனன் மனைவி அலமேலு (65) வீட்டின் முன்பு இடிக்க முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அலமேலு தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றினர். இதற்கிடையே கிராம வட்டார வளர்ச்சி அலுவலருக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த பொதுமக்களில் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.