இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்றுவதில் தவறில்லை - திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
பாரதம் என இந்தியாவின் பெயர் மாறுவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என கூறியுள்ளார்.
உசிலம்பட்டி,
வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்த எதிர்க்கட்சிகள் கூட்டமைப்பிற்கு 'இந்தியா (I.N.D.I.A)' என பெயர் வைத்து செயல்பட்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு இந்தியா (I.N.D.I.A) என இந்திய நாட்டின் பெயர் வரும்படி பெயர் வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்தியா என்ற பெயரை ஆளும் பாஜக அரசு தவிர்த்து வருகிறது என்றே கூறலாம். தற்போது இந்தியா எனும் பெயருக்கு பதில் பாரத் எனும் பெயரை குறிப்பிட வேண்டும் என்ற குரல் பாஜக ஆதரவாளர்களின் ஒருமித்த குரலாக மாறி வருகிறது.
வரும் செப்டம்பர் 18ஆம் தேதி கூட உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் இந்தியாவின் பெயர் பாரதம் என மாற்றம் பெறுவதோ அல்லது மற்ற அரசு குறிப்பேடுகளில் இந்தியாவின் பெயருக்கு பதிலாக பாரதம் என குறிக்கும் வகையில் சொல் மாறுவது பற்றிய தீர்மானங்களோ நிறைவேற்றப்படலாம் என கூறப்படும் நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.
இந்நிலையில் பாரதம் என இந்தியாவின் பெயரை மாற்றுவது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் உசிலம்பட்டியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், பாரதம் என இந்தியாவின் பெயர் மாறுவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்தியாவுக்கு பாரத் என பெயர் மாற்றுவதில் எந்த தவறுமில்லை. இந்தியா – பாரதம் எல்லாம் ஒன்று தான். தற்போது அனைவரும் பழமையை விரும்புகிறார்கள். அதேபோல தான் பாரதம் என்ற பெயர் மாற்றமும். அதில் எந்த தவறும் இல்லை. இந்த மாற்றத்தை அதிமுக ஆதரிக்கிறது. எடப்பாடி பழனிசாமியும் ஆதரிப்பார் என்றார்.