காவிரி நீரை பெறுவதில் அரசியல் பாகுபாடு கிடையாது - திருச்சி சிவா

ஜீவாதார உரிமை பிரச்சினையான காவிரி நதிநீரை பெறுவதில் அரசியல் பாகுபாடு கிடையாது என திருச்சி சிவா எம்.பி. தெரிவித்தார்.

Update: 2023-09-16 20:06 GMT

மத்திய மந்திரியை சந்திக்க முடிவு

காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக நேற்று நடந்த தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் கூட்டத்தின் முடிவில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்துக்கு காவிரியில் கிடைக்க வேண்டிய நீரை வழங்கிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உரிய முறையில் தெரியப்படுத்திடவும், காவிரி நதிநீர் ஆணையத்தின் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்திடவும், மத்திய ஜல்சக்தி மந்திரியை, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தமிழகத்தின் அனைத்து கட்சி எம்.பி.க்களோடு சென்று சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு காவிரி நதிநீரில் கிடைக்கக்கூடிய உரிய பங்கை பெறுவதில் இந்த அரசு உரிய முயற்சி எடுத்துக்கொள்ளும்.

ஜீவாதார உரிமை பிரச்சினை

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடுக்கின்ற சீரிய முயற்சிகளுக்கு உறுதுணையாக எம்.பி.க்கள், டெல்லியில் ஜல்சக்தி மந்திரியை சந்தித்து அவருக்கு இதுதொடர்பாக தரவேண்டிய விளக்கங்கள், நியாயங்களை தந்து, கர்நாடக அரசு தந்திருக்கக்கூடிய மாறான கருத்துகளுக்கும் சரியான விளக்கத்தை கொடுத்து நமக்கு கிடைக்க வேண்டிய நீதியை பெற்றிட உரிய முயற்சியினை நாங்கள் மேற்கொள்ள முடிவு எடுத்து இருக்கிறோம்.

தி.மு.க. எம்.பி.க்கள் மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்களுக்கும் இதை தெரியப்படுத்தி இருக்கிறோம். இதில் அரசியல் பாகுபாடு கிடையாது. இது தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமை பிரச்சினை. எனவே தமிழ்நாடு முதல்-அமைச்சர் இதில் அனைவரையும் அரவணைத்து சென்று செய்திட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தான் நாங்கள் செய்ய உள்ளோம்.

உரிமைகள், தேவைகள்...

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் என்னென்ன நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்ற நிரல் இடம்பெறவில்லை. அனைத்து கட்சிகள் கூட்டத்தில் அதுபற்றி தெரியப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. எம்.பி.க்கள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தமிழ்நாட்டின் உரிமைகள், தேவைகளை நிச்சயமாக எடுத்துரைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்