தமிழை போன்ற பழமையான மொழி வேறு எதுவும் கிடையாது -ராமதாஸ்
தமிழை போன்ற பழமை வாய்ந்த மொழி வேறு எதுவும் கிடையாது என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சிதம்பரம்,
பா.ம.க. நிறுவனர் டாக்டா் ராமதாஸ், 'தமிழைத்தேடி' என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை சென்னையில் கடந்த 21-ந் தேதி தொடங்கினார். 8 நாட்கள் நடைபெறும் இந்த பிரசார பயணம் 28-ந் தேதி மதுரையில் நிறைவடைகிறது.
அந்த வகையில் நேற்று சிதம்பரத்தில் 'தமிழைத்தேடி' விழிப்புணர்வு பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதற்கு பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கடலூர் தெற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் செல்வ.மகேஷ் வரவேற்றார்.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டா் ராமதாஸ் பேசியதாவது:-
முத்தமிழை தொலைத்துவிட்டோம்
தில்லையிலாவது தமிழ் அன்னை கிடைப்பாளா என காண வந்துள்ளேன். தமிழறிஞர்களே எங்காவது தமிழ் அன்னையை பார்த்தீர்களா?. அண்ணாமலை செட்டியார் இங்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தொடங்கி இசை மீது ஆர்வம் கொண்டு இசை கல்லூரியை தொடங்கினார். அதை வளர்க்க சென்னையில் அண்ணாமலை மன்றத்தை நிறுவினார். தமிழில் பாட வேண்டும் என அவர் விரும்பி பலரை அழைத்தார். ஆனால் யாரும் வர மறுத்துவிட்டனர்.
தில்லை நகருக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. ஆனாலும் இங்கும் தமிழ் இல்லை. தமிழிசையில் 103 பண்கள் உள்ளது. வேறு எந்த மொழியிலும், இத்தனை பண்கள் இல்லை. அப்படிப்பட்ட இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழை நாம் தொலைத்துவிட்டு நிற்கிறோம். தமிழில் படித்தால் கேவலம் என நினைக்கிறோம். ஆங்கிலம் ஒரு மொழிதான். அது அறிவுசார்ந்த மொழியல்ல. ஆனால் அதனை நமது மொழியோடு ஒப்பிடும்போது தமிழை போன்ற மொழி உலகத்திலேயே எங்கும் இல்லை.
ஊக்கம் அளிக்க வேண்டும்
திருச்சி பாரதிதாசனார் பல்கலை ஆராய்ச்சியில் தமிழின் வயது 15 ஆயிரம் ஆண்டுகள் என கூறுகின்றனர். இதுபோன்ற பழமை வாய்ந்த மொழி வேறு எதுவும் கிடையாது. உலகிலேயே மூத்த மொழிகளாக வடமொழி, லத்தீன், கிரேக்கம், சீனம், அரபு, தமிழ் உள்ளிட்ட 8 மொழிகள் உள்ளன. அதில் மிகவும் சிறந்த மொழி தமிழ் மொழிதான். அரசு அலுவலகங்களில் உள்ள பலகையில் தமிழ் வாழ்க என்று போடப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ்தான் அங்கு இல்லை. தமிழ் மெல்ல, மெல்ல சாகும் என நீலகண்ட சாஸ்திரிகள் கூறினார். அவர் கூறியது போல தமிழ் மெல்ல அல்ல, வேகமாக அழிந்து வருகிறது. வீட்டில் உள்ள அனைவரும் தங்களது பிள்ளைகளுக்கு கலப்பு மொழி இல்லாமல் தமிழ் மொழியில் பேச ஊக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.