ஆவினில் ஹெல்த் மிக்ஸ் கிடையாது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் விளக்கமளித்தார்.;
சென்னை,
கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டக திட்டத்தில் முறைகேடு நடந்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார்.
இது தொடரப்பாக அவர் பேசுகையில், "கடந்த ஏப்ரல் மாதம் சிலரது நிர்பந்தம் காரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தில் ஆவின் ஹெல்த் மிக்ஸ் நீக்கப்பட்டு தனியார் நிறுவனத்தின் மிக்ஸ் சேர்க்கப்பட்டது. ஆவினில் வாங்காமல் தனியார் நிறுவனத்திடம் வாங்கியதால் ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது " என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தற்போது இதற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் பேசுகையில் "32 புரோட்டின் கலவைகள் உள்ள பவுடர் 2018ல் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. ஆவினில் ஹெல்த் மிக்ஸ் கிடையாது. ஆவினில் ஹெல்த் மிக்ஸ் இருப்பது போலவும் அதை வாங்க அரசு மறுப்பதாகவும் பரவல் மிகவும் தவறானது. ஊட்டச்சத்து பெட்டகத்தில் உள்ள நெய் ஆவினில் இருந்து தான் கொள்முதல் செய்யப்படுகிறது. டெண்டர் யார் எடுத்தாலும் ஆவினில் இருந்து தான் நெய் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது" என விளக்கமளித்தனர்.