சென்னை துறைமுகத்தில் கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்து கடலில் கலந்ததால் பரபரப்பு

சென்னை துறைமுகத்தில் கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்து கடலில் கலந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை துறைமுக ஊழியர்கள், தீயணைப்பு மற்றும் துறை சார்ந்த பணியாளர்கள் உடனடியாக அகற்றினார்கள்.;

Update: 2022-07-07 00:32 GMT

சென்னை,

இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு தேவையான எண்ணெய் மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்து குழாய் வழியாக சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து கப்பல் மூலம் ஏற்றி, எண்ணூருக்கு எடுத்து சென்று அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வழக்கமாக இதற்கான பணியில் ஈடுபடும் "ஹரி ஆனந்த்" என்ற பெயரிலான தனியார் நிறுவனத்தின் கப்பல், மணலியில் இருந்து குழாய் வழியாக கொண்டு வரப்படும் எண்ணெயை ஏற்றுவதற்காக சென்னை துறைமுகத்துக்கு நேற்று காலை வந்தது.

குழாயில் இருந்து கப்பலில் எண்ணெயை ஏற்றுவதற்கான பணி தொடங்கும் நேரத்தில், கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்ததை பார்த்து உடனடியாக, அந்த பணியை நிறுத்தி, எண்ணெய் கசிவு ஏற்படும் இடத்தை ஆய்வு செய்தபோது கப்பலின் எரிபொருள் டேங்கில் இருந்து எண்ணெய் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து துறைமுக அதிகாரிகள், பணியாளர்கள், தீயணைப்புத்துறை, கடலோர காவல்படை, சுற்றுச்சூழல் துறை, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள், பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, எண்ணெய் கசிந்த இடத்தை பார்வையிட்டனர்.

உடனடியாக களப்பணியில் ஈடுபட்ட அவர்கள் நேற்று காலை 6 மணி முதல் 10 மணிக்குள் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, கடலில் கசிந்து இருந்த எரிபொருள் எண்ணெயை அகற்றிவிட்டனர். இதுதொடர்பாக சென்னை துறைமுக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு இரு கப்பல்கள் மோதியதில், ஒரு கப்பலில் கொண்டு செல்லப்பட்ட கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இதனால் மீன்கள், ஆமைகள் போன்ற கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன. கடலில் கலந்த எண்ணெயை அகற்றும் பணி பல நாட்களாக நடந்து, அகற்றப்பட்டது. தற்போது கப்பலின் எரிபொருள் எண்ணெய் கசிந்த விவகாரம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்