தமிழ்மொழிக்காக மீண்டும் போராட்டம் நடத்தக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது-காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பேச்சு

மத்திய பா.ஜனதா அரசால் தமிழ்மொழிக்காக மீண்டும் போராட்டம் நடத்தக்கூடிய சூழல் ஏற்பட்டு உள்ளது என்று தி.மு.க. பொதுக்கூட்டத்தில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.;

Update: 2023-01-27 18:39 GMT

ராமநாதபுரம்,

மத்திய பா.ஜனதா அரசால் தமிழ்மொழிக்காக மீண்டும் போராட்டம் நடத்தக்கூடிய சூழல் ஏற்பட்டு உள்ளது என்று தி.மு.க. பொதுக்கூட்டத்தில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.

பொதுக்கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் ராமநாதபுரம் அரண்மனை முன்பு மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. மாவட்ட துணை செயலாளர்கள் கருப்பையா, ஆதித்தன், சுஜாதா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சுரேஷ் வரவேற்றார். தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன், மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இந்த கூட்டத்தில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

மீண்டும் மொழிக்காக போராட்டம்

தமிழ்நாட்டில் மீண்டும் தமிழ் மொழிக்காக போராட்டம் நடத்தும் சூழல் ஏற்பட்டு உள்ளது. மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் மொழிப்போராட்டத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்தி திணிக்கப்படுகிறது. வெவ்வேறு மொழிகள், கலாசாரத்தை கொண்ட பல மாநிலங்கள் இணைந்த துணைக்கண்டமான இந்தியாவில் ஒரே நாடு, ஒரே மொழி என பொருந்தாத சிந்தாந்தத்தை பா.ஜ.க. புகுத்த நினைக்கிறது.

1938-ல் இருந்து இந்தி திணிப்பை எதிர்ப்பதில் என்றும் மாறாத கொள்கை உள்ள கட்சி தி.மு.க. இந்திக்கு தரும் முக்கியத்துவம் தமிழ் மொழிக்கு தரப்படாததால் இரு மொழி கொள்கையை அண்ணா கொண்டு வந்தார். அதுதான் இன்று வரை தொடர்கிறது. தமிழ்நாடு மட்டும் இந்தியை எதிர்த்த நிலையில் இன்று தென் மாநிலங்கள் அனைத்தும் இந்தியை எதிர்க்கின்றன. அண்ணா, கருணாநிதி உருவாக்கிய மொழிப்பற்றை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காப்பாற்றி வருகிறார். மாணவர்களுக்கு தாய்மொழி தமிழ் பற்று வளர வேண்டும்.

காசியில் தமிழ் சங்கமம் நடத்துகிறார்கள். தமிழர்களுக்கு காசியுடன் மட்டுமல்ல உலகம் முழுவதும் கல்வி, கலாச்சார, வணிக தொடர்பு உண்டு.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், இளைஞர் அணி மாநில துணை செயலாளர் இன்பாரகு, ராமநாதபுரம் யூனியன் தலைவர் பிரபாகரன், ராமேசுவரம் நகர்மன்ற தலைவர் நாசர்கான், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ராமவன்னி, மகளிர் தொண்டரணி செயலாளர் ராணி, தலைமை செயற்குழு உறுப்பினர் மிசா அகமதுதம்பி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெள்ளா அப்பாஸ்கனி, கீழக்கரை நகர் செயலாளர் பசீர் அகமது, ஒன்றிய செயலாளர்கள் பிரவீன், நிலோபர்கான், தகவல் தொழில் நுட்ப அணி விஜய கதிரவன், மண்டபம் பேரூர் செயலாளர் அப்துல் ரகுமான் மரைக்காயர், கவுன்சிலர் காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மொழிப்போர் தியாகிக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. முடிவில் மாணவரணி துணை செயலாளர் ஸ்டாலின் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்