கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை தொடர்ந்து உயரும் அபாயம்

ஆவணி மாதத்தில் முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வருவதாலும், வரத்து குறைவாக இருப்பதாலும் பூக்களின் விலை தற்போது உயர்ந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.;

Update:2023-08-21 10:39 IST

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கடந்த வாரத்தைவிட உயர்ந்து இருக்கிறது. ஆடி மாதம் நிறைவு பெற்றதையொட்டி, ஆவணி மாதத்தில் முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வருவதாலும், வரத்து குறைவாக இருப்பதாலும் பூக்களின் விலை தற்போது உயர்ந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிலும் நேற்று முன்தினம் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து இருந்தது. உதாரணமாக மல்லிகைப்பூ ஒரு கிலோ சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.700 முதல் ரூ.800 வரை விற்பனை ஆனது. இதேபோல் மற்ற பூக்களின் விலையும் 2 முதல் 3 மடங்கு வரை உயர்ந்து காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இதன் விலை சற்று குறைந்து இருந்தாலும், வழக்கமான விலையைவிட அதிகரித்துதான் இருந்தது. அதன்படி, ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.400 முதல் ரூ.500 வரையிலும், முல்லைப்பூ ரூ.300, ஜாதிப்பூ ரூ.200, அரளி ரூ.200, சம்மங்கி ரூ.500, சாமந்தி ரூ.150, ரோஸ் ரூ.120 முதல் ரூ.150 வரை, செண்டு மல்லி ரூ.40, கனகாமரப்பூ ரூ.300 முதல் ரூ.400 வரை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை ஆனது.

வருகிற 25-ந்தேதி வரலட்சுமி நோன்பு வருகிறது. இதையொட்டி, வருகிற 23 மற்றும் 24-ந்தேதிகளில் பூக்களின் விலை கடுமையாக உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் வரலட்சுமி நோன்புக்கு விற்பனை ஆகும் தாழம்பூ ஒன்று ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை ஆகும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்