நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தேனி அல்லிநகரம் நகராட்சி

தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு ரூ.20 கோடி அளவில் வரி மற்றும் வாடகை வசூலாகாமல் நிலுவையில் உள்ளதால் கடும் நிதி நெருக்கடியில் நிர்வாகம் சிக்கி தவிக்கிறது.;

Update:2023-10-01 03:30 IST

வரி, வாடகை நிலுவை

தேனி அல்லிநகரம் நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாகும். இங்கு 88 ஆயிரத்து 575 சொத்துவரி விதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, குப்பை வரி மற்றும் நகராட்சி கடைகள் வாடகை உள்ளிட்ட வகையில் ஆண்டுக்கு ரூ.28 கோடியே 40 லட்சம் வருவாய் வரவேண்டும்.

கடந்த சில மாதங்களாக நகராட்சிக்கு வரவேண்டிய வரி இனங்கள், கட்டணங்கள், வாடகை உள்ளிட்டவை வசூலாகாமல் இருந்து வருகிறது. அந்த வகையில் சொத்துவரி ரூ.6 கோடியே 69 லட்சம், குடிநீர் கட்டணம் ரூ.9 கோடியே 11 லட்சம், காலிமனை வரி ரூ.21 லட்சம், தொழில் வரி ரூ.22 லட்சம் என மொத்தம் ரூ.16 கோடியே 23 லட்சம் அளவில் வசூலாகாமல் இருந்து வருகிறது.

நிதி நெருக்கடி

மேலும் நகராட்சிக்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள் பலர் வாடகை செலுத்தாமல் இருந்து வருகின்றனர். இந்த வகையில் நீண்ட காலமாக ரூ.1 கோடியே 75 லட்சமும், இந்தாண்டு வாடகை நிலுவையாக ரூ.1 கோடியே 98 லட்சமும் உள்ளது. வரி மற்றும் வாடகை என மொத்தம் ரூ.19 கோடியே 96 லட்சம் நிலுவையாக உள்ளது. நகராட்சிக்கு வரவேண்டிய மொத்த வருவாயும் நிலுவையாக இருப்பதால், தேனி அல்லிநகரம் நகராட்சி கடும் நிதி நெருக்கடியில் உள்ளது.

இதனால் நகராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்து வருகிறது. நகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு மாத சம்பளம் கொடுக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் குடிநீர் வினியோகம் செயல்படுத்துவதற்கான மின்கட்டணம் செலுத்தப்படாததால், மின்சாரம் துண்டிப்பு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தேனி அல்லிநகரம் நகராட்சி நிதி நிலைமை மோசமாக உள்ளதில் இருந்து மீட்கும் நடவடிக்கையாக அதிரடியாக வரிவசூல் பணி மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

கடும் நடவடிக்கை

நகராட்சிக்கு சொந்தமான கடைகளை குத்தகைக்கு எடுத்துள்ளவர்கள், வாடகை தொகையினை நிலுவை தொகையுடன் ஒரு வார காலத்திற்குள் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் கடைகளை பூட்டி 'சீல்' வைப்பதுடன் கடைகளை ஏலத்தில் விட உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று எவரேனும் உள்வாடகைக்கு விடப்பட்டிருப்பதாக தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் ஜப்தி நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளது. நேற்று சில இடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தாத வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள் உரிமத்தை ரத்து செய்யவும், மின் இணைப்பு துண்டிக்கவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்யப்படவுள்ளது.

எனவே, தேனி அல்லிநகரம் நகராட்சி பொது மக்கள், வணிகர்கள் மற்றும் தொழில் நிறுவனத்தினர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் உடனடியாக செலுத்தி நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த தகவலை நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்