கும்பாபிஷேகம் முடிந்து ஒருவாரத்தில் அய்யனாரப்பன் கோவில் கோபுர கலசம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கும்பாபிஷேகம் முடிந்து ஒருவாரத்தில் அய்யனாரப்பன் கோவில் கோபுர கலசத்தை திருடிய மர்ம நபர்களை போலீசாா் தேடி வருகின்றனா்.;
விழுப்புரம் அருகே மோட்சகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடந்து முடிந்ததை தொடர்ந்து கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 13-ந் தேதியன்று நடந்தது. நேற்று முன்தினம் இரவு இக்கோவிலில் பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டிவிட்டு சென்றனர்.
இந்நிலையில் நேற்று காலை கோவில் பூசாரி, கோவிலை திறக்க வந்துள்ளார். அப்போது கோவில் கோபுரத்தில் இருந்த செம்புக்கலசம் ஒன்று திருடுபோயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கோவிலின் மதில்சுவரில் ஏறி உள்ளே குதித்து கோபுர கலசத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கும்பாபிஷேகம் முடிந்து ஒருவாரம் ஆகும் நிலையில் கலசம் திருடுபோயிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.