சுல்தான்பேட்டையில் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் திருட்டு-தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் கலக்கம்

சுல்தான்பேட்டையில் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் திருடுபோனது. தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் கலக்கம் அடைந்து உள்ளார்கள்.

Update: 2023-09-12 19:00 GMT


சுல்தான்பேட்டை


சுல்தான்பேட்டையில் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் திருடுபோனது. தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் கலக்கம் அடைந்து உள்ளார்கள்.


பேக்கரி கடையில் திருட்டு


கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை எஸ். எஸ்.நகரில் குடியிருந்து வருபவர் செல்வகுமார் (வயது 47). இவர் சுல்தான்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே பேக்கரி கடை நடத்தி வருகிறார்.சம்பவத்தன்று வியாபாரம் முடிந்து கடையை இரவு பூட்டிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது கடையின் வெளிபுறம் ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கடை மேஜை டிராயர் உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.39 ஆயிரத்து 600 திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, செல்வகுமார் சுல்தான்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின், கடை முன்பக்கம், உள்பக்கம் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.


தொடர் சம்பவங்கள்


அதில், பேக்கரியின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த டிப்-டாப் திருடன் கடையில் ஜாலியாக நடந்து தின்பண்டங்களை ருசித்துவிட்டு, பின் குளிர்பானம் அருந்திவிட்டு தனது கைவரிசையை காட்டியது பதிவாகி உள்ளது. திருடனுக்கு வயது சுமார் 25-க்குள் இருக்கும் என தெரிகிறது.


சுல்தான்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம்தான் ஒரு வீட்டில் திருட்டு நடந்தது. தற்போது பேக்கரியில் புகுந்து மர்ம ஆசாமி திருடிய சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- சுல்தான்பேட்டை பகுதியில் கடந்த ஜூலை மாதம் முதல் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கடும் அதிர்ச்சி, அச்சம் ஏற்பட்டுஉள்ளது. திருட்டு சம்பவத்தை தடுக்க போலீசார் இரவு மற்றும் அதிகாலைநேரம் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்