ஓய்வு பெற்ற ஊழியரிடம் நூதனமுறையில் ரூ.2 லட்சம் திருட்டு
திருவண்ணாமலையில் பட்டப்பகலில் ஓய்வு பெற்ற ஊழியரிடம் நூதனமுறையில் ரூ.2 லட்சம் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
திருவண்ணாமலை வானவில் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 60),
ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர். இன்று மதியம் இவர் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள வங்கியில் பணம் எடுப்பதற்காக மொபட்டில் வந்துள்ளார்.
பின்னர் அவர் வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு ஒரு பையில் வைத்து வெளியே வந்துள்ளார்.
பணப்பையை அவர் மொபட்டில் கைப்பிடி அருகே மாட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் வண்டியின் அருகில் ரூபாய் தாள் கீழே கிடப்பதாக கூறியுள்ளார்.
அதனை எடுக்க அவர் மொபட்டில் இருந்து இறங்கிய சமயத்தில் அங்கிருந்த மற்றொரு நபர் மொபட்டில் இருந்த பணப்பையை எடுத்துக் கொண்டு தயார் நிலையில் இருந்த மோட்டார் சைக்கிள் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்.
பின்னர் கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் குற்றப்பிரிவு போலீசார் வேங்கிக்கால் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு சோதனை செய்தனர்.
பட்டப்பகலில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தால் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.