ஓடும் பஸ்சில் பணம் திருட்டு; கைக்குழந்தையுடன் 2 பெண்கள் கைது

நெல்லையில் ஓடும் பஸ்சில் கைக்குழந்தையுடன் வந்து பணம் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-07-14 18:55 GMT

நெல்லையில் ஓடும் பஸ்சில் கைக்குழந்தையுடன் வந்து பணம் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

பணம் திருட்டு

நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்தவர் வேணி (வயது 26). இவர் நெல்லைைய அடுத்த பேட்டையில் இருந்து டவுனுக்கு நேற்று முன்தினம் தனியார் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது கூட்ட நெரிசலாக இருந்ததால் பஸ்சில் நின்றவாறு பயணம் செய்த ஒரு இளம்பெண் தனது குழந்தையை வேணியிடம் கொடுத்தார்.

அப்போது அவருடன் வந்த மற்றொரு இளம்பெண் நைசாக வேணியின் கைப்பையில் இருந்த ரூ.500-ஐ திருடினார். இதனை பார்த்த சக பயணிகள், அந்த 2 இளம்பெண்களையும் பிடித்து நெல்லை டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

2 பேர் கைது

அவர்களிடம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் விசாரணை நடத்தினார். அதில் அவர்கள், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியைச் சேர்ந்த முத்துராஜா மனைவி உமா (27), மாணிக்கம் மனைவி இசக்கியம்மாள் (22) என்பதும், அந்த குழந்தை இசக்கியம்மாள் உடையது என்றும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் கூட்டமாக இருக்கும் பஸ்சில் ஏறி, பயணிகளிடம் குழந்தையை கொடுப்பது போல் கொடுத்து பணம் திருடுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைக்குழந்தையுடன் கைது செய்து மதுரையில் உள்ள சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்