அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை- பணம் திருட்டு
இலுப்பூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
அன்னவாசல்:
நகை-பணம் திருட்டு
இலுப்பூர் அருகே இடையபட்டி கிராமம் காசியாபுரத்தை சேர்ந்தவர் கணேசன். விவசாயியான இவர், நேற்று முன்தினம் இரவு காசியாபுரம் அருகே உள்ள கூவாட்டுப்பட்டி அய்யனார் கோவில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். பின்னர் திருவிழா முடிந்து வீடு திரும்பினர். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் நகை, ரூ.20 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதேபோல கணேசன் வீட்டை அடுத்துள்ள மதி என்பவரது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 2 பவுன் நகை, ரூ.5 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். மேலும் வீ்ட்டில் இருந்த ஆவணங்களையும் மர்மநபர்கள் எடுத்து அருகில் உள்ள புதருக்குள் வீசி சென்றுள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோரிக்கை
கடந்த சில தினங்களுக்கு முன்பு இலுப்பூரில் அரசு மருத்துவர் வீட்டில் சுமார் 200 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனதும், ஒரே நாளில் 4 இடங்களில் கொள்ளை சம்பவம் நடந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதனால் இலுப்பூர் போலீஸ் சரக பகுதியில் கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகம் உள்ளதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.