கிறிஸ்தவ சபையில் பொருட்கள் திருட்டு
கிறிஸ்தவ சபையில் பொருட்கள் திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் -ரெட்டியார்பட்டி ரோட்டில் அசோக் நகர் டி.காலனியில் பெந்தே கோஸ்தே சபை உள்ளது. இங்கு சபையின் பாஸ்டர் ஜான் (வயது 42) நேற்று முன்தினம் சபையை பூட்டி சென்றார். நேற்று காலை மீண்டும் சபைக்கு வந்த போது, கதவு திறந்து கிடந்தது. நள்ளிரவில் மர்ம நபர்கள் சபைக்குள் புகுந்து அங்கிருந்த ஸ்பீக்கர், கண்காணிப்பு கேமரா ஹார்டு டிஸ்க், ஆம்பிளிபயர் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதே போல் அருகில் உள்ள புவனேசுவரி நகரில் சலவை தொழிலாளி செந்தில் (35) என்பவர் வீட்டின் முன்பு தனது மொபட்டை நிறுத்தி இருந்தார். அதனை மர்ம நபர்கள் நைசாக திருடிச்சென்று விட்டனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.