வெள்ளிச்சந்தை அருகே பட்டப்பகலில் துணிகரம்: ஆசிரியர் தம்பதி வீட்டில் 38 பவுன் நகை, பணம் திருட்டு ;மர்ம ஆசாமிகள் கைவரிசை

வெள்ளிச்சந்தை அருகே ஆசிரியர் தம்பதி வீட்டில் 38 பவுன் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2023-10-13 18:45 GMT

வெள்ளிச்சந்தை அருகே உள்ள சரல் பகுதியை சேர்ந்தவர் ஜான் கென்னடி (வயது 58). இவர் நெல்லை மாவட்டம் பணகுடி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மேரி ஸ்டெல்லா ராணி (56). இவர் மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

பணகுடியில் வேலை பார்ப்பதால் ஜான் கென்னடி முன்னதாகவே காலையில் பணிக்கு சென்று விட்டு தாமதமாக வீடு திரும்புவது வழக்கம். அதன் பிறகு மனைவி மேரி ஸ்டெல்லா ராணி வேலைக்கு புறப்பட்டு செல்வார்.

இவர்களுடைய மகன் தூத்துக்குடியில் வேலை பார்த்து வருகிறார். வாரம் ஒரு முறை தான் அவர் ஊருக்கு வந்து செல்வாராம். மகளை கருங்கல் பகுதியில் உள்ள ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் காலை 8.30 மணிக்கு மேரி ஸ்டெல்லா ராணி வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கூடத்திற்கு சென்றார்.

38 பவுன் நகை, பணம் திருட்டு

மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்தது.

உடனே அவர் பதற்றத்துடன் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அனைத்து அறைகளும் திறந்த நிலையில் கிடந்தன. யாரோ சில மர்ம ஆசாமிகள் ஆளில்லாததை நோட்டமிட்டு வீடு புகுந்து திருடியதை அவர் உணர்ந்தார். அறை முழுவதும் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

அங்கு 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 38.5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.22 ஆயிரத்து 500 திருடு போய் இருந்தது. இது குறித்து மேரி ஸ்டெல்லா ராணி தன்னுடைய கணவர் ஜான் கென்னடிக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர் விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டு வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார்.

கண்காணிப்பு கேமரா ஆய்வு

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தடய வியல் நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. வீட்டில் மோப்பம் பிடித்த நாய் அங்கிருந்து ஓடிய நாய் கால்வாய் கரை வழியாக சென்று திரும்பி வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

நீண்ட நாட்களாக ஜான் கென்னடியின் வீட்டை நோட்டமிட்டு மர்மஆசாமிகள் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. எனவே அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் இதுதொடர்பாக வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மஆசாமிகளை தேடிவருகின்றனர்.

பட்டப்பகலில் ஆசிரியர் தம்பதி வீட்டில் புகுந்து மர்மஆசாமிகள் நகை, பணம் திருடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்