தமிழகத்தில் 1-ம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு
தீபாவளி பண்டிகையின் மறுநாளான 1-ம் தேதியை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 29 உலக தண்ணீர் தினம், மே 1 தொழிலாளர்கள் தினம், ஆகஸ்டு 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினம் ஆகிய 6 நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படும். அந்த வகையில் நவம்பர் 1-ம்தேதி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் மறுநாளான நவம்பர் 1-ம் தேதியை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி நவம்பர் 1-ம் தேதி கிராம சபை கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த நிலையில், காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி நடைபெறும் கிராம சபை கூட்டத்தை மற்றொரு நாளைக்கு மாற்றி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதை ஏற்று 1-ம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டமானது ஒத்திவைக்கப்படுவதாகவும், கிராம சபை கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசின் உத்தரவின் பேரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குனர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.