தியாகதுருகம் வாரச்சந்தையில் தொடரும் மோட்டார் சைக்கிள் திருட்டு போலீஸ் பற்றாக்குறையை சரிசெய்து திருட்டை தடுக்க வலியுறுத்தல்
தியாகதுருகம் வாரச்சந்தையில் தொடரும் மோட்டார் சைக்கிள் திருட்டு நடந்து வருவதாகவும் இதை தடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.;
தியாகதுருகம் சந்தைமேட்டுபகுதியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் தியாகதுருகம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள், மளிகை பொருட்கள், பழங்கள், கருவாடுகள் உள்ளிட்டவைகளை வாங்கி செல்கின்றனர்.
இதில் மாலை நேரங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகமாக வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
இவ்வாறு வெளியூர் பகுதியில் இருந்து வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்கள் தங்களது மோட்டார் சைக்கிளை சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் மற்றும் பஸ் நிறுத்தம் அருகே நிறுத்திவிட்டு சந்தைக்கு செல்கின்றனர். பொருட்களை வாங்கிகொண்டு மீண்டும் வந்து மோட்டார் சைக்கிளை பார்க்கும்போது மோட்டார் சைக்கிள் காணவில்லை என கூறுகின்றனர். இவ்வாறு கடந்த சில வாரங்களில் மட்டும் 5- க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் செல்போன்களும் மர்ம நபர்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தியாகதுருகம் அருகே வடதொரசலூர் பகுதியில் அதிகாலை நேரத்தில் மொபட்டில் வந்த ஒருவரை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து தாக்கி மொபட்டை பிடுங்கி செல்கின்றனர். தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் சிறிது தூரத்தில் மொபட்டை விட்டு, விட்டு சென்றுள்ளனர். இதில் மர்ம நபர் தாக்கியதில் மொபட்டில் வந்தவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு திருட்டு சம்பவங்கள் தொடர்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
போலீசார் பற்றாக்குறை
தியாகதுருகம் ேபாலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் 45 கிராமங்கள் உள்ளது. ேபாலீஸ் நிலையத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், 2 போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 31 போலீசார் பணியில் இருக்க வேண்டும். ஆனால் சிறப்பு புலனாய்வு பிரிவு மற்றும் காவல் துறையில் உள்ள பல்வேறு தனிப்பிரிவுகள் ஆகியவற்றிற்கு போலீசார் பலரும் சென்று விட்டனர். இதனால் தற்பொழுது தியாகதுருகம் காவல் நிலையத்தில் 16 போலீசார் மட்டுமே பணியில் உள்ளதாகவும், அதிலும் இரவு காவல் பணி, நிலைய எழுத்தர், கணினி உதவியாளர், நீதிமன்ற பணிக்கு செல்வது உள்ளிட்ட பணிகளில் 6 போலீசார் ஈடுபடுகின்றனர். இதனால் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 8 போலீசார் உள்ளிட்ட 10 போலீசார் மட்டுமே அன்றாட நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் ேபாலீஸ் நிலையத்திற்கு வரும் புகார்களை விசாரிப்பது, சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட பணிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் போலீசார் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது.
எஸ்.பி.நடவடிக்கை
எனவே சம்பந்தப்பட்ட கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தியாகதுருகம் ேபாலீஸ் நிலையத்தில் உள்ள பணியிடங்களுக்கு தேவையான போலீஸ்காரர்களை பணியில் அமர்த்தவும், தொடர் குற்ற செயல் நடைபெறும் இடத்திற்கு போலீசார் பாதுகாப்பை அதிக படுத்த வேண்டும் எனவும், மேலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து அதன் மூலம் மர்ம நபர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
தடுக்க வேண்டும்
இதுகுறித்து தியாகதுருகத்தை சேர்ந்த சங்கர் என்பவர் கூறுகையில், தியாகதுருகத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று காலை நேரங்களில் ஆடு மற்றும் மாடுகள் சந்தையும், மாலை நேரங்களில் காய்கறி வாரச்சந்தையும் நடைபெறுகிறது.
இதில் குறிப்பாக மாலை 6 மணிக்குமேல் கிராமப் பகுதியில் இருந்து காய்கறி வாங்க அதிகம் பேர் வந்து செல்கின்றனர். இதனால் கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட காவல்துறையினர் வாரச்சந்தை அன்று கூடுதலான போலீசாரை பணியில் ஈடுபடுத்தி போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வேண்டும்.
திருயாகதுருகத்தை சேர்ந்த செந்தில் என்பவர் கூறுகையில், நான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தியாகதுருகம் வாரச்சந்தைக்கு காய்கறி வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றிருந்தேன். அப்போது, எனது மோட்டார் சைக்கிளை சந்தை அருகே சாலையோரம் நிறுத்திவிட்டு காய்கறி வாங்கிக் கொண்டு மீண்டும் வந்து பார்த்தபோது காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். ஆனால் இதுவரை எனது மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்கவில்லை. இதே போல் ஒவ்வொரு வாரமும் வாரச்சந்தையில் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடுவது தொடர்ந்து நடைபெறுகிறது. இதை தடுப்பதுடன், எனது மோட்டார் சைக்கிளையும் கண்டுபிடித்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.