நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் அதிகாரி மகளிடம் ரகளை செய்த வாலிபர்கள் போலீசை பார்த்ததும் தப்பி ஓட்டம்

ஓடும் பஸ்சில் அதிகாரியின் மகளிடம் சில்மிஷம் செய்த வாலிபர்கள் போலீசை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர்.;

Update: 2023-04-18 21:43 GMT

நாகர்கோவில்:

ஓடும் பஸ்சில் அதிகாரியின் மகளிடம் சில்மிஷம் செய்த வாலிபர்கள் போலீசை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர்.

11-ம் வகுப்பு மாணவி

பூதப்பாண்டி அருகே உள்ள தெரிசனங்கோப்பு பகுதியைச் சேர்ந்த மீன்வளத்துறை அதிகாரியின் 16 வயது மகள் நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவி நேற்று முன்தினம் மாலையில் தனது தோழியை பார்ப்பதற்காக வீட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்டார்.

இதற்காக தெரிசனங்கோப்பில் இருந்து மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது பஸ்சில் மாணவி அமர்ந்திருந்த இருக்கையின் பின் இருக்கையில் 3 வாலிபர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் மாணவியின் தலை முடியை பிடித்து இழுத்து தொந்தரவு கொடுக்க தொடங்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தான் அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்து வேறொரு இருக்கையில் சென்று அமர்ந்தார்.

இந்தநிலையில் பஸ்சானது அண்ணா பஸ் நிலையம் வந்தது. உடனே மாணவி பஸ்சை விட்டு இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போதும் அந்த வாலிபர்கள் மாணவியை பின் தொடர்ந்து சென்றனர். அவர்கள் திடீரென மாணவியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்.

தப்பி ஓட்டம்

இதனால் செய்வதறியாது திகைத்த மாணவி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் செல்போனை வாங்கி தனது பெற்றோரை தொடர்பு கொண்டு, வாலிபர்கள் தன்னிடம் ரகளை செய்ததை கூறினார். இதைக்கேட்ட மாணவியின் தந்தை உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தை செல்போனில் தொடர்பு கொண்டு தகவலை கூறினார்.

உடனே போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தனிப்படை போலீசாரை அண்ணா பஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். போலீசார் வருவதைப் பார்த்ததும் வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் மாணவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மாணவி கூறிய அடையாளங்களை வைத்து வாலிபர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கூடுதல் பாதுகாப்பு

ஏற்கனவே அண்ணா பஸ் நிலையத்தில் பெண்களுக்கு ஒரு தலைக்காதலர்கள் தொல்லை அதிகமாக உள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே அண்ணா பஸ் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்