கத்தியை காட்டி மிரட்டி பரோட்டா கேட்ட வாலிபர்கள்
மதுரையில் கத்தியை காட்டி மிரட்டி பரோட்டா கேட்ட வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;
மதுரை,
மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (43 வயது). இவர், ஆரப்பாளையம் பஸ் நிலைய பகுதியில் உள்ள ஓட்டலில் கேசியராக இருக்கிறார். சம்பவத்தன்று, கடைக்கு வந்த 2 பேர், பணம் கொடுக்காமல் பரோட்டா கேட்டு உள்ளனர். அதற்கு அவர் பணம் கேட்டபோது, தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து கழுத்தில் வைத்து மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்து ரமேஷ், கரிமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கத்தியை காட்டி மிரட்டியது அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ் (22 வயது), ஸ்ரீவசந்த் (20 வயது) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.