முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகனை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகனை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;
விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூரை சேர்ந்தவர் இளையராஜா (வயது 45). முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகனான இவரை கடந்த 8-ந் தேதி ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை துப்பாக்கியால் சுட்டதாக மணவாளநல்லூரை சேர்ந்த விஜயகுமார் (27), ராஜா ஆடலரசு (25), சூர்யா என்கிற சூரியபிரகாஷ் (25), வெங்கடேசன் (44), சதீஸ்வரன் (29), சரவணன் (25), புகழேந்திராஜா (27), அருண்குமார் (25), முகமது யூனுஸ் (23), அன்பரசு (27), செந்தில்குமார் (24), அழகேஸ்வரன் (43) ஆகிய 12 பேரை கைது செய்தனர்.
இதில் ராஜா ஆடலரசு மீது விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் 2 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இதனால் அவரது தொடர் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் ராஜா ஆடலரசுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கலெக்டர் அருண்தம்புராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தில் ராஜா ஆடலரசுவை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜா ஆடலரசுவிடம், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.