வீட்டிற்குள் புகுந்த வாலிபருக்கு தர்மஅடி
கரூர் அருகே வீட்டிற்குள் புகுந்த வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.;
வாலிபருக்கு தர்ம அடி
கரூர் மாவட்டம், குந்தாணிபாளையம் அருகே உள்ள பாதகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரதிவிராஜ் (வயது 40). இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் அருகில் உள்ள தனது தோட்டத்தில் இருந்தார். அப்போது இரவு 7.30 மணி அளவில் 3 வாலிபர்கள் பிரதிவிராஜின் வீட்டை திறந்து உள்ளே சென்றுள்ளனர். இதைக்கண்ட தோட்டத்தில் இருந்த பிரதிவிராஜ் மற்றும் குடும்பத்தினர் சத்தம் போட்டுள்ளனர்.
இதையடுத்து 3 வாலிபர்களும் வீட்டினுள் இருந்து அருகில் உள்ள தோட்டத்திற்குள் தப்பியோடினர். இதில் 2 வாலிபர்கள் தோட்டத்தின் கம்பிவேலியை தாண்டி ஓடிவிட்டனர். ஒருவரை மட்டும் பிரதிவிராஜ் பொதுமக்கள் உதவியுடன் துரத்தி சென்று பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனால் அவர் காயம் அடைந்துள்ளார்.
2 பேருக்கு வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த வாலிபரை பிடித்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக வீட்டிற்குள் சென்றார்? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய 2 வாலிபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.