வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
புதுப்பேட்டை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
புதுப்பேட்டை,
புதுப்பேட்டை அருகே உள்ள பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன் மகன் பிரசாந்த் (வயது 26). இவர் பனப்பாக்கம் சாலையில் செல்போன் பேசியபடி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் செல்போனை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டார்.
இதுகுறித்து பிரசாந்த் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் பறித்துச் சென்ற வாலிபரை தேடி வந்தனர்.
கைது
இந்த நிலையில், அங்குசெட்டிப்பாளையம் சாலையில் முரளி என்பவரிடம் 500 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பி ஓடிய வாலிபர் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர் பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் பாலமுருகன் (வயது 32) என்பதும், இவர் பல்வேறு இடங்களில் வழிபறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் பிரசாந்திரடம் செல்போன் பறித்து சென்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவர் என்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.